அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாய்நகர், வடக்கு சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், ஒன்றிய செயலாளர் சங்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் தட்டுப்பாடு இல்லாமல் சீரான குடிநீர் வழங்க வேண்டும். தெருக்களில் கூடுதலாக தண்ணீர் பைப்புகள் அமைக்க வேண்டும். மின் கம்பங்கள் மற்றும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. முத்துச்சிப்பி, தாமோதரன், கிருஷ்ணம்மாள் (மாதர் சங்கம்) சுதர்சன், சிலுவை உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனர்.