எரியூட்டும் ஆலையை மூட கோரி பொதுமக்கள் போராட்டம்
மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையை மூட கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி
நரிக்குடி ஒன்றியம் அ.முக்குளம் அருகே உண்டுறுமி கிடாக்குளத்தில் மருத்துவ கழிவு எரியூட்டும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் காரியாபட்டி - நரிக்குடி சாலையில் முடுக்கன்குளம் பஸ் நிறுத்தம் அருகே மருத்துவ கழிவு ஆலைக்கு எடுத்து செல்லப்பட்ட மருத்துவ கழிவு மூடை திடீரென வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த கழிவு மூடையை கண்டு கொள்ளாமல் வேன் டிரைவர் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். காரியாபட்டி - நரிக்குடி சாலை வழியாக மருத்துவ கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வரக்கூடாது என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், காரியாபட்டி மண்டல துணை தாசில்தார் சிவனாண்டி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் காரியாபட்டி-நரிக்குடி சாலை முடுக்கன்குளத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காரியாபட்டி - நரிக்குடி சாலைவழியாக வாகனங்கள் வராது என உத்தரவாதம் அளித்த பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.