நெடுவரம்பாக்கம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்


நெடுவரம்பாக்கம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
x

பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் சென்னை சுற்றுவட்ட சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர்

சாலை அமைக்கும் பணி

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை மூலம் சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்தில் மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்திலிருந்து தச்சூர், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில் வழியாக மகாபலிபுரம் வரை 134 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2750 கோடியில் சாலை அமைக்க திட்டமிட்டப்பட்டது.

முதற்கட்டமாக காட்டுப்பள்ளி, வாயலூர், நெய்தவாயல், கல்பாக்கம், நாலூர், அனுப்பம்பட்டு, வன்னியம்பாக்கம், நெடுவரம்பாக்கம் உள்பட 15 க்கும் மேற்பட்ட கிராமத்தின் வழியாக பஞ்செட்டி கிராமத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சுரங்கப்பாதை அமைக்க கோரி...

இந்நிலையில் நெடுவரம்பாக்கம் கிராமம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதியில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல முடியாமல் அந்த பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மேலும் நெடுவரம்பாக்த்தில் இருந்து ஆண்டார்குப்பத்திற்கு செல்ல சாலையின் குறுக்கே சுரங்கபாதை அமைத்து தர கிராம மக்கள் பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காத பட்சத்தில் சுமார் 5 கிலோ மீட்டம் சுற்றி கொண்டு செல்ல நேரிடும் என தெரிவிக்கின்றனர்.

பரபரப்பு

தகவல் அறிந்த பொன்னேரி எம்.எல்.ஏ துரைசந்திரசேகர், தாசில்தார் செல்வகுமார், சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெடுவரம்பாக்கம் கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்று அனுமதி பெறப்படும் வரையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்த இடத்தில் சாலை பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என ஊறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story