ஆலங்குளத்தில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்
ஆலங்குளத்தில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் போராட்டம்
ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேம்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகிறது. அதன் பின்னர் இங்கிருந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டன. ஊழியர்களும் மற்ற இடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டனர். எனினும் அரசு மருத்துவமனைக்கு தேவையான எவ்வித வசதிகளும் இங்கு செய்து கொடுக்கப்படவில்லை எனவும், போதிய மருத்துவர்கள், ஊழியர்கள் நியமனம் செய்யப்படாததால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மருத்துவமனைமயை மேம்படுத்தக்கோரி பொதுமக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் தென்காசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரேமலதா, தாசில்தார் ரவீந்திரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில், "இந்த மருத்துவமனையை மேம்படுத்த அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் 10 மருத்துவர்கள், 10 செவிலியர்கள், 60 படுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.