கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

கரிக்கலாம்பாடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த நிலையில் கரிக்கலாம்பாடி ஊர் பொதுமக்கள் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கரிக்கலாம்பாடி ஏரியின் கரையை சிலர் 450 மீட்டர் நீளத்திற்கு வெட்டி மண்ணை திருடி உள்ளனர். வெட்டிய பகுதியின் மேற்புறம் உள்ள பனை மரங்கள் சாயும் நிலையில் உள்ளன. பலத்த மழை பெய்தால் அந்த மரங்கள் சாய்ந்துவிடும். ஏரி நிரம்பினாலோ, புயல் வெள்ள அபாயம் ஏற்பட்டாலோ ஏரி உடையும் நிலைமை ஏற்படும்.
நீர் நிலையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம நிர்வாக அலுவலர் மோகனிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






