பெரியகுளத்தில் பொதுமக்கள் தொடர் மறியல்:முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிப்பு
பெரியகுளத்தில் பொதுமக்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
பெரியகுளத்தில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இந்து முன்னணியை சேர்ந்த சிலர் அம்பேத்கர் சிலை குறித்து பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 19-ந் தேதி அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மோதலை தூண்டும் வகையில் கட்சியின் நிர்வாகி ஒருவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எ.புதுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடை பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியகுளத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்காக ஆயுதப்படை போலீசார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து போலீசார் பெரியகுளம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.