மூங்கில்துறைப்பட்டு அருகே லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இருந்து பழையூருக்கு செல்லும் சாலையில் தினசரி ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக சாலையில் அதிகளவு புழுதி பறப்பதால், கடும் சிரமமடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவ்வழியாக வந்த லாரி டிரைவரிடம், அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள், லாரியை இவ்வழியாக இயக்காமல், மாற்று வழியில் இயக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டிரைவர் லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தினார். பின்னர் என்னை இந்த வழியில் செல்லக்கூடாது என்று கூறினால், நீங்கள் யாரும் இவ்வழியாக செல்லக்கூடாது என்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.