வயலூர் சாலையில் தொடர் விபத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல்
வயலூர் சாலையில் தொடர் விபத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
முதியவர் பலி
திருச்சி வயலூர் சாலை, மாநகரின் முக்கிய பகுதியாக உள்ளது. தினமும் இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக புத்தூர் நான்குரோட்டில் இருந்து உய்யகொண்டான்திருமலை வரை இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடனேயே காணப்படும். அதிலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போதும், மாலையில் வீடு திரும்பும்போதும், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை தான் ஏற்படும்.
பரபரப்பான இந்த சாலையில் கடந்த சில நாட்களாக சாலை பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு, மோசமான நிலையில் சாலை உள்ளது. இந்த சாலையில் தான் வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. கடந்த வாரம் இந்த சாலையில் குமரன்நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். இதனால் உடனடியாக வயலூர் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
மறியல்
இந்தநிலையில் நேற்று பகல் அரியமங்கலம் உக்கடையை சேர்ந்த சிவானந்தம் (வயது 60) என்ற முதியவர் மோட்டார் சைக்கிளில் உய்யகொண்டான் திருமலை பகுதியில் இருந்து புத்தூர் நான்குரோடு நோக்கி சென்றார். கீதாநகர் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்றபோது, முன்னால் மெதுவாக சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது லாரியின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். நேற்று மாலை வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முருகேசன், செயலாளர் காளிமுத்து, பொருளாளர் கரிகாலன்ரவி மற்றும் சண்முகாநகர், அம்மையப்பநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் திரண்டு சென்று வயலூர் சாலையில் கீதாநகர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள், வயலூர்சாலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் வாரந்தோறும் உயிர்பலி ஏற்படுவதாகவும், சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடக்கும் என்றும் கூறினர். இதையடுத்து அங்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர்கள் நிவேதாலெட்சுமி, ராஜூ தலைமையிலான போலீசார் மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.