டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
x

இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவியின் கால் முறிவு ஏற்பட்டதால் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

மாணவி கால் முறிந்தது

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மலைக்குடிபட்டியில் இருந்து தென்னலூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பெண்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அந்த சாலையின் வழியே செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது. நேற்று முன்தினம் அந்த கடையில் மது குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் மலைக்குடிபட்டி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் ஆனந்த் என்பவரின் மகள் வைஷாலி (வயது 11) மீது மோதினார். இதில் அவரது கால் முறிந்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை மறியல்

இந்தநிலையில், அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மலைக்குடிபட்டி பஸ் நிலையம் அருகே புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் அப்பகுதி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் சமாதான கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கடையை மூட அதிகாரிகள் முன்வராவிட்டால் அடுத்த கட்டமாக கடும் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story