பயணிகள் நிழற்குடை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
கறம்பக்குடி அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பயணிகள் நிழற்குடை சேதம்
கறம்பக்குடி அருகே தீத்தான்விடுதி ஊராட்சியை சேர்ந்த சுக்கிரன்விடுதி கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை சுக்கிரன்விடுதியில் கறம்பக்குடி-திருவோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.