பஞ்சாயத்து தலைவர் மீது புகார் அளித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
ராஜபாளையம் அருகே பஞ்சாயத்து தலைவர் மீது புகார் அளித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே பஞ்சாயத்து தலைவர் மீது புகார் அளித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
ராஜபாளையம் அருகே திருவேங்கடபுரம் கிராமத்தில் உள்ள ஊர் பொது மாரியம்மன் கோவில் கட்டிடம் சேதமடைந்து விட்டதால் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் இருந்த வேப்பமரம் அகற்றப்பட்டுள்ளது.
அப்போது அங்கு வருவாய் ஆய்வாளர் மலர்விழி மற்றும் ராதா கிருஷ்ணன் வந்தனர். அவர்கள் மரங்களை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அந்த சமயத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கியதாக கூறி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மலர்விழி அனுமதிக்கப்பட்டார்.
மேலும் மேலராஜ குலராமன் ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் தூண்டுதலின் படி தான் தாக்கப்பட்டதாக மலர்விழி கொடுத்த புகாரின் பேரில், கீழராஜ குலராமன் போலீசார் விவேகானந்தன் மீது வழக்குபதிவு செய்தனர்.
பந்தலை அகற்ற உத்தரவு
இந்தநிலையில் கோவிலுக்குள் காலணியுடன் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தங்களை, வருவாய் ஆய்வாளரும், அவர் உடன் வந்தவரும் தாக்கியதாக கூறி கோவில் பூசாரி முத்தால் ராஜ் அளித்த புகாரின் பேரில் வருவாய் ஆய்வாளர் மலர்விழி, அவருடன் வந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் இல்லாத ஊராட்சி தலைவர் மீது புகார் அளித்து தங்களது ஊரின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் வருவாய் ஆய்வாளர் செயல்படுவதாகவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் நேற்று திருவேங்கட புரம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆலங்குளம் செல்லும் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீழராஜகுலராமன் போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட பந்தலையும் அகற்ற உத்தரவிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை அவ்விடத்தில் இருந்து செல்ல மறுத்த பொது மக்கள், கொளுத்தும் வெயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை சூப்பிரண்டுகள் பிரீத்தி, சிவகாசி பாபு பிரசாத், ரகுராமன் எம்.எல்.ஏ., வட்டாட்சியர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் போராட்டம் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.