அழகாபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம்; 147 பயனாளிகளுக்கு ரூ.54½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


அழகாபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம்; 147 பயனாளிகளுக்கு ரூ.54½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

அழகாபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில், 147 பயனாளிகளுக்கு ரூ.54½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த அழகாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமுக்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 161 மனுக்கள் பெறப்பட்டு, 147 மனுக்கள் ஏற்கப்பட்டும், 14 மனுக்கள் விசாரணைக்குப்பின் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று நடைபெற்ற முகாமில் 218 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதையடுத்து, வருவாய்த்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், 35 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாறுதல் ஆணைகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 2 ஆயிரத்து 600 மதிப்பிலான இணையவழி வீட்டுமனை பட்டாக்களும், கூட்டுறவு துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு பயிர்கடன்களையும், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மருத்துவ பெட்டகங்கள் என மொத்தம் 147 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 59 ஆயிரத்து 530 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முகாமில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன், அழகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story