திருப்புனவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்
திருப்புனவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி, 648 பயனாளிகளுக்கு, ரூ.1.05 கோடி மதிப்பில் தையல் மிஷின், உழவு எந்திரம், பூச்சிமருந்து அடிக்கும் தெளிப்பான், மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது திருப்புனவாசலை சுற்றியுள்ள பகுதியில் குடிதண்ணீருக்காக ஆழ்குழாய்கிணறு அமைத்தும் நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கூறினர். முன்னதாக முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கோட்டாட்சியர் சொர்ணராஜ், ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி, ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் துரைமாணிக்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன், சுந்தரபாண்டியன், பாண்டி, திருப்புனவாசல் ஊராட்சி மன்ற தலைவர் மலர் நல்லதம்பி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.