குடிக்காடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 170 பயனாளிகளுக்கு ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகள்
குடிக்காடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 170 பயனாளிகளுக்கு ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் அருகே உள்ள அயிலூர் குடிக்காடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில் கலெக்டர் கற்பகம் பேசும்போது கூறியதாவது:- பாடாலூர் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் குளிரூட்டும் மையம் மற்றும் பாலின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் வகையில் நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தி அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக தாட்கோ மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கறவை மாடுகள் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் படிப்பை தொடரவும், உயர்கல்வி பெற பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, பல்வேறு துறைகள் மூலமாக 170 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரத்து 988 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அயிலூர் குடிக்காடு ஏரிக்கரை பகுதியில் வேம்பு மற்றும் புங்க மரக்கன்றுகளை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நட்டனர். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ. நிறைமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.