இயற்கை எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு; போலீசார் சமரசத்தால் சாலை மறியல் தவிர்ப்பு
இயற்கை எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் கெயில் இந்திய நிறுவனத்தின் வால்வு ஸ்டேஷன் பகுதியிலிருந்து மாமண்டூர் வழியாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள 3 கிலோமீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. இயற்கை எரிவாயு குழாய் பதிப்பதற்கு மாமண்டூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து மாமண்டூர் கிராம மக்களுக்கும், எரிவாயு குழாய் பதிக்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையே ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம் தலைமையில் 3 முறை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றும் கிராம மக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் எரிவாயு குழாய் பதிக்கும் தனியார் நிறுவனம் மாமண்டூர் பகுதியில் குழாய்களை பதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவனத்துடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபடுவதற்கு வந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடாமல் தடுத்து அனுப்பி வைத்தார்.