தேவாலா பஜாரில் பொதுமக்கள் சாலை மறியல்


தேவாலா பஜாரில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுயானையை பிடிக்கக்கோரி தேவாலா பஜாரில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. தர்ணாவில் ஈடுபட்டார்.

நீலகிரி

கூடலூர்

காட்டுயானையை பிடிக்கக்கோரி தேவாலா பஜாரில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. தர்ணாவில் ஈடுபட்டார்.

பெண் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது தங்கை பாப்பாத்தி(வயது 56). இவர்களது வீட்டை கடந்த 19-ந் தேதி காட்டுயானை ஒன்று உடைத்தது. அப்போது, அவர்கள் 2 பேர் மீதும் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அதில் பாப்பாத்தியை காட்டுயானை தாக்கியது. இதில் அவர் பலியானார். மேலும் ராமலிங்கம் காயத்துடன் தப்பினார். இதை அறிந்த பொதுமக்கள் காட்டுயானையை பிடிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை உறுதி அளித்தது.

சாலை மறியல்

ஆனால் இதுவரை காட்டுயானையை பிடிக்காததை கண்டித்து தேவாலா பஜாரில் நேற்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் போக்குவரத்து சீரானது.

எம்.எல்.ஏ. தர்ணா

இதற்கிடையில் காட்டுயானையை பிடிக்க உத்தரவிடக்கோரி கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் பொதுமக்கள், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அம்ரித் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதை ஏற்று தர்ணாவை கைவிட்ட பிறகு பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ. கூறும்போது, தேவாலாவில் அட்டகாசம் செய்யும் மக்னா யானைக்கு பி.எம்.-2 என்று பெயரிட்டுள்ளனர். இந்த யானைைய பிடிக்க ஒரு ஆண்டாக கோரிக்ைக விடுத்து வருகிறோம். எனவே அந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க உடனே உத்தரவிட வேண்டும் என்றார்.


Next Story