குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் ஊராட்சியில் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 8 மணி அளவில் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அந்தியூர்- பர்கூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவ சங்கரன், கெட்டிசமுத்திரம் ஊராட்சி தலைவர் மாறன், அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், 'எங்களுக்கு கடந்த சில வாரங்களாக பாதுகாக்கப்பட்ட ஆற்றுக்குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.

மேலும் தெருக்களில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இருட்டில் வீதிகளில் நடக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இதேபோல் சாக்கடை வசதி உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் எங்களுக்கு முறையாக இல்லை. எனவே எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், 'புதிதாக ரூ.15 லட்சம் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது. அதுவரை பிளாஸ்டிக் டேங்க் வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும், மேலும் தெருவிளக்கு, சாக்கடை வடிகால் உள்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து சாலை மறியல் போராட்டத்தை 9 மணி அளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story