வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

சுல்தான்பேட்டை அருகே வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விபத்துகள் அதிகரிப்பு

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பி.வடுகபாளையம் பிரிவு, பல்லடம்-உடுமலை சாலையில் உள்ளது. இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல்லடம்-உடுமலை சாலையில் எஸ்.பி.வடுகபாளையம் பிரிவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு வேகத்தடை அமைக்கக்கோரி இன்று காலை 8.30 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல்லடம்-உடுமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதை அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கே.டி.பழனிசாமியும், பொதுமக்களுடன் இணைந்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினார். மேலும் சிலர் தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை ஏற்று 9.30 மணிக்கு சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். முன்னதாக மறியல் காரணமாக ஜே.கிருஷ்ணாபுரம் வழியாக சாலைப்புதூர் மெயின் ரோட்டுக்கு செல்லும் வகையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது.


Next Story