பொள்ளாச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்
பொள்ளாச்சியில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழிகள் நிரம்பி, கழிவுநீர் ரோட்டில் செல்வதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இந்த நிலையில் ராஜா மில் ரோட்டில் உள்ள ஆள்இறங்கு குழி நிரம்பி, கழிவுநீர் ரோட்டில் ஓடியதால் கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் குடிநீருடன் கலந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், இதுகுறித்து ஏற்கனவே புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே நகராட்சி பொறியாளர் வந்த பிறகுதான் மறியலை கைவிடுவோம் என்றனர்.
பரபரப்பு
இதை தொடர்ந்து நகராட்சி பொறியாளர், உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உடனடியாக அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையில் போலீசார் கைது செய்வதற்கு வேனை கொண்டு வந்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பு கொடுக்க பணம் செலுத்தி வருகிறோம். மேலும் அடுத்த ஆண்டு(2024) மார்ச் மாதத்திற்கு செலுத்த வேண்டிய வரியை தற்போதே வசூலித்து வருகின்றனர். ஆனால் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.