தோணித்துறை அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - போலீசார் பேச்சுவார்தை...!
தோணித்துறை அருகே கஞ்சா கடத்தல்காரர்களுக்கு துணை போகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கரைப் பேட்டையைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை தோணித்துறை ரயில்வே கேட் அருகே அக்கரைப் பேட்டையைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாது வண்ணம் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:-
அக்கரைபேட்டையில் கஞ்சா கடத்தல்காரர்களுக்கு, ஒரு பிரிவினர் துணைபோகின்றனர். இவ்வாறு துணைபோகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து கலெக்டர் அல்லது உதவி கலெக்டர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை முதலாவது கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.