பொது வழிபாதை தகராறு: கல்லால் தாக்கி விவசாயி கொலை - ஆட்டோ டிரைவர் கைது


பொது வழிபாதை தகராறு: கல்லால் தாக்கி விவசாயி கொலை - ஆட்டோ டிரைவர் கைது
x

பொது வழிபாதை தகராறு தொடர்பாக கல்லால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை அடுத்த கோளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). விவசாயி. இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளாக நேதாஜி நகர் பகுதியில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டில் பெருமாள் தனியாக வசித்து வந்தார்.

இவரது வீட்டின் அருகே மதன் (35) என்ற ஆட்டோ டிரைவர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

இவர்கள் இருவரின் வீடுகளுக்கும் நடுவில் உள்ள பொது வழிபாதையில் மதன் பள்ளம் தோண்டி வீடு கட்ட கடைக்கால் போட முயற்சித்தார். அப்போது பெருமாள் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து அதை தடுத்துள்ளார். இதனால் அவ்வப்போது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆவேசமடைந்த மதன் அருகே இருந்த பெரிய கல்லை எடுத்து பெருமாளின் தலையில் தாக்கி உள்ளார். அதில் படுகாயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த ஆட்டோ டிரைவர் மதன் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மற்றும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பெருமாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய மதன் காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார் குளம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் துளசி ஆகியோர் மதனை மடக்கி பிடித்து கைது செய்து, தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் முதியவரை, கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் கோளிவாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story