மளிகை கடைக்காரரை தாக்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


மளிகை கடைக்காரரை தாக்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
x

சென்னிமலை அருகே மளிகை கடைக்காரரை தாக்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே மளிகை கடைக்காரரை தாக்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியில் பெருந்துறை தொகுதி செயலாளராக இருந்து வருகிறார்.

நேற்று காலையில் லோகநாதன் அங்குள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் குடியிருந்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சினேகலதா மாலிக் (29) என்ற பெண்ணும் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அங்கு தண்ணீர் பிடிப்பதில் லோகநாதனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணின் சகோதரர் ராது மாலிக் ( 32), அவருடைய மனைவி கீதா மாலிக் (29) ஆகியோரும் அங்கு வந்து லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

லோகநாதன் தாக்கப்பட்ட தகவல் ஈங்கூர் பகுதியில் பரவியது. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈங்கூர் நால்ரோட்டில் தடுப்புகளை குறுக்கே வைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னிமலை - பெருந்துறை ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

3 பேர் கைது

பின்னர் லோகநாதனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் சினேகலதா மாலிக், ராது மாலிக், கீதா மாலிக் ஆகியோர் மீது சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.


Related Tags :
Next Story