பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் குறைந்த மின்அழுத்தம் ஏற்படுவதாக கூறி சாலை மறியல் செய்தனர்

சிவகங்கை

எஸ்.புதூர்-

எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் குறைந்த மின்அழுத்தம் ஏற்படுவதாக கூறி சாலை மறியல் செய்தனர்.

குறைந்த மின்அழுத்தம்

எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது குரும்பலூர், சடையம்பட்டி கிராமங்கள். இந்த கிராமங்களில் 450 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் குரும்பலூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்அழுத்தம் ஏற்படுவதாகவும், இதனால் மின் மோட்டார், மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை உள்ளதாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண வேண்டும் எனகூறி நேற்று எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர்.

பேச்சுவார்த்தை

இதன் காரணமாக அந்த வழியாக வந்த பஸ் சாலையில் நிறுத்தப்பட்டது. உடனே அங்கு வந்த உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, வாராப்பூர் வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது:-

எங்கள் வாராப்பூர் ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளது. ஆங்காங்கே மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. கடந்த சில நாட்களாக முறையாக மின் வினியோகம் இல்லை. எனவே இந்த கிராமங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தோம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்தோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தால் எஸ்.புதூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story