பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x

அரசு புறம்போக்கு இடத்தில் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

அரசு புறம்போக்கு இடத்தில் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் 37 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தரைக்காடு பகுதியில் அரசு உருது தொடக்கப்பள்ளி இல்லாதலால் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மாணவர்கள் படித்து வந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் உருது பள்ளி ஏற்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இதனை ஏற்று 2018-ம் ஆண்டில் அரசு தொடக்கப்பள்ளி ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்புடன் மாத வாடகையில் பள்ளி இயங்கி கொண்டு வருகிறது. அரசு புறம்போக்கு இடத்தில் உருது பள்ளிக்கு பள்ளி கட்டிடம் கட்டக்கோரி கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காம்பவுண்டு சுவர்

அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர், வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அரசு புறம்போக்கு இடம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட புறம்போக்கு பகுதியில் தனிநபர் ஒருவர் 3 சென்ட் பரப்பளவு இடத்தை பிடித்து வைத்து கொண்டு தனக்கு அரசு பட்டா வழங்கி உள்ளதாகவும், தனக்கு சொந்தமான இடம் என கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருவை அடைத்தவாறு திடீரென 6 அடி உயரத்தில் காம்பவுண்ட் எழுப்பினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு வருவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி ஆய்வு செய்ததில் அரசுக்கு சொந்தமான பாதை புறம்போக்கு இடம் என்பது உறுதி செய்யப்பட்டது. தனி நபரை வருவாய் துறையினர் எச்சரித்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே இடத்தில் அதிகாரிகள் எச்சரிக்கையும் மீறி காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டதால் தரைக்காடு பகுதி பொதுமக்கள் திரண்டு தரைக்காடு - வீ.கோட்டா ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை வட்டாட்சியர் பலராமன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் காம்பவுண்டு சுவர் கட்டும் பணியையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story