மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
தீபாவளி
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள் ஆகும். இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேலையில் பட்டாசுகளை வெடிப்ப தால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று பெருமளவில் மாசுபடுகின்றது. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியவர்கள் மற்றும் நோயாளிகள், உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
விழிப்புணர்வு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனை ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒத்துழைப்பு
ஆஸ்பத்திரி மற்றும் வழிபாட்டு தளங்கள் போன்ற அமைதியான இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாக வகையில் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.