குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்


குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடுமையான வெயில்

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வால்பாறையில் பிப்ரவரி மாதத்திலேயே கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் முன்கூட்டியே வறட்சி தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. எனவே வரக்கூடிய நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வால்பாறை நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

இதுகுறித்து வால்பாறை நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

வால்பாறை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக கருமலை எஸ்டேட்டில் உள்ள அக்காமலை தடுப்பணை இருந்து வருகிறது. இங்கிருந்து 1,795 குடியிருப்புக்களுக்கும், 120 பொது குடிநீர் குழாய்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது வால்பாறையில் கடுமையான வெயில் வாட்டி வருவதால், அக்காமலை தடுப்பணையின் முக்கிய நீராதாரமான இறைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

மேலும் தடுப்பணையிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வருகிற கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வால்பாறை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, லாரிகள் மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story