நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை


நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Dec 2022 7:30 PM GMT (Updated: 8 Dec 2022 7:30 PM GMT)

மத்திய அரசின் மானியத்தொகை வழங்க வலியுறுத்தி நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சேலம்

மத்திய அரசின் மானியத்தொகை வழங்க வலியுறுத்தி நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு இல்லாதவர்கள் புதிதாக வீடு கட்டும் போது மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருகின்றனர். அவர்களுக்கு மானியத்தொகை வரவில்லை என்று கூறி நேற்று ஏராளமானவர்கள் சேலம் 4 ரோடு அருகே உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல இடங்களில் கடன் பெற்று புதிதாக வீடு கட்டி வருகிறோம். இன்னும் முழுமையாக வீடு கட்டி முடிக்கவில்லை.

முற்றுகை போராட்டம்

மானியத்தொகை பெற்று கட்டுமான பணியை முடிக்கலாம் என்று இருந்தோம். 5 மாதம் ஆகியும் மானியத்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் மானியத்தொகை நிறுத்தப்பட்டு விட்டது என்று கூறுகின்றனர். இதனால் ஏழை, எளியவர்களான நாங்கள் வீடுகட்டும் பணியை பாதியில் நிறுத்தி உள்ளோம். எனவே மானியத்தொகை வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளோம் என்று கூறினர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது மாவட்டத்தில் 600 பேருக்கு மானியத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 400 பேருக்கு மானியத்தொகை வரவில்லை. எனவே அரசிடம் இருந்து பணம் கிடைக்கப்பெற்றதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு மானியத்தொகை வழங்கப்படும் என்று கூறினர். தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story