போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

விபத்து வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள சோழம்பூண்டியை சேர்ந்த முரளி மனைவி மலர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மலர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் முரளி கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் இருந்து இரவு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது விபத்தை ஏற்படுத்தியது கார் என தெரியவந்தது. இருப்பினும் காரில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்குப்பதிவு செய்ததோடு நிறுத்திவிட்டனர். கார் உரிமையாளரை கைது செய்யாமலும், காரை மோட்டார் வாகன ஆய்வுக்கு உட்படுத்தாமலும் போலீசார் அலட்சியமாக இருந்து வருகின்றனர். போலீசாருக்கு கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நீதி வழங்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story