தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோரிக்கை மனு

காரியாபட்டி அருகே கீழத்துலுக்கன்குளம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்ட போக மீதமுள்ள இடம் பொது பயன்பாட்டிற்காக இருந்தது. தற்போது அந்த இடத்தை தனிநபருக்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த தனிநபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அம்மாசி தலைமையில் கிராம மக்கள் சார்பாக தாசில்தாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள இடத்தை தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், காரியாபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர். முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமாதானம் அடையாத கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் தனி நபருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமாருக்கு பரிந்துரை செய்வதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story