நுகர்பொருள் வாணிப கழகத்தை பொதுமக்கள் முற்றுகை


நுகர்பொருள் வாணிப கழகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

மண் எண்ணெய் வழங்குவதில் குளறுபடி நடப்பதாக கூறி நுகர்பொருள் வாணிப கழகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

மண் எண்ணெய் வழங்குவதில் குளறுபடி நடப்பதாக கூறி நுகர்பொருள் வாணிப கழகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் முற்றுகை

பொள்ளாச்சி காமாட்சி நகரில் நுகர்பொருள் வாணிப கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் மாதந்தோறும் மண் எண்ணெய் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மண் எண்ணெய் வழங்காமல் பொதுமக்களை அலைக்கழித்ததாக தெரிகிறது. இதற்கிடையில் இன்று பொதுமக்கள் மண் எண்ணெய் வாங்குவதற்கு வந்தனர். காலை 11 மணி ஆகியும் வழங்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நுகர்பொருள் வாணிப கழகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த லாரிகளை உள்ளே விடாமலும், வெளியே லாரிகளை செல்ல அனுமதிக்காமலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் 200 பேருக்கு மண் எண்ணெய் வழங்க டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு, அருகில் மண் எண்ணெய் வழங்கும் இடத்திற்கு சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வார்டு வாரியாக பிரித்து...

பொள்ளாச்சி நகராட்சி 32, 33, 34, 35 மற்றும் 36 ஆகிய வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் அருகில் மண் எண்ணெய் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

மாதத்தில் 26-ந்தேதி மண் எண்ணெய் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மாதம் 26-ந்தேதியை கடந்தும் மண் எண்ணெய் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். இதற்கிடையில் மண் எண்ணெய் 2 லிட்டர் வாங்கியதாக குறுந்தகவல் வருகிறது. ஆனால் ஒரு லிட்டர் தான் வழங்கப்படுகிறது. இதற்கு முன் 900 லிட்டர் வரை மண் எண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று 430 லிட்டர் தான் வந்து உள்ளதாக கூறுகின்றனர். மாதத்தில் ஒரு லிட்டர் மண் எண்ணெய் வாங்குவதற்கு வேலைக்கு செல்லாமல் காலையில் இருந்து காத்திருக்க வேண்டிய உள்ளது. மாதத்தில் ஒரு நாள் ஊற்றுவதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே மாதத்தில் 2 நாட்கள் மண் எண்ணெய் வார்டு வாரியாக பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் எண்ணெய் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை அதிகாரிகள் கண்காணித்து முறையாக பொதுமக்களுக்கு மண் எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story