புளியந்தோப்பில் மனைப்பிரிவு அமைக்கப்பட்ட இடத்தை பொதுமக்கள் முற்றுகை


புளியந்தோப்பில் மனைப்பிரிவு அமைக்கப்பட்ட இடத்தை பொதுமக்கள் முற்றுகை
x

புளியந்தோப்பில் மனைப்பிரிவு அமைக்கப்பட்ட இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அரியலூர்

மீன்சுருட்டி:

12 மனைப்பிரிவுகள்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் புளியந்தோப்பில் உள்ள இடத்தில் 2½ சென்ட் வீதம் 12 மனைப் பிரிவுகளாக வருவாய்த்துறையினர் அளந்து, கல் போடப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கைலாசபுரம் புளியந்தோப்பில் மனைப்பிரிவு அமைக்கப்பட்ட இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், மற்ற பகுதிகளில் நீர்நிலைகளில் குடியிருந்து வரும் இடம் இல்லாத பொதுமக்களுக்காக இந்த மனைப்பிரிவு அமைக்கப்பட்டதாக தெரிகிறது. அதை தவிர்த்து எங்கள் கிராமத்தில் வசிக்கும் இடம் இல்லாத ஏழை, எளிய பொதுமக்களுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம், என்றனர்.

பேச்சுவார்த்தை

போராட்டம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், ராஜதுரை மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேந்திரன், வேல்முருகன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கோரிக்கை குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவதாகவும், தற்போது மனைபிரிவு மட்டுமே போடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story