தீபாவளி சீட்டு நடத்தியவர் வீட்டை பொதுமக்கள் முற்றுகை
கடலூரில் 310 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தீபாவளி சீட்டு நடத்தியவர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தீபாவளி சீட்டு நடத்தி 310 பேரிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக தெரிகிறது. அந்த பணத்தை அவர் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பணத்தை கொடுத்தவர்கள் அவரது மனைவியிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. இது பற்றி பாதிக்கப் பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். இருப்பினும் எவ்வித பலனும் இல்லை.
முற்றுகை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று திடீர்குப்பத்தில் உள்ள ராஜா வீட்டை முற்றுகையிட்டு, அவரது மனைவியிடம் பணத்தை கேட்டனர்.
அதற்கு அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போலீசாருக்கும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கலைத்து விட்டனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.