தனியார் மதுக்கூடத்தை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் தனியார் மதுக்கூடத்தை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் தனியார் மதுக்கூடத்தை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் முற்றுகை
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு ஒம்பிரகாஷ் தியேட்டர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் மதுக்கூடமும் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் மூலம் மதுக்கூடம் திறக்கப்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த பொதுமக்கள் அந்த மதுக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது அந்த மதுக்கூடம் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றுக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விபத்துகள் அதிகரிப்பு
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையொட்டி தனியார் மதுக்கூடம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கோட்டூர் ரோடு ஓம்பிரகாஷ் தியேட்டர் பகுதியில் ஏற்கனவே ஒரு மதுக்கடையும், அருகில் மதுக்கூடமும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் பஸ் நிறுத்தம் உள்ளதால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் தனியார் மூலம் மதுக்கூடம் தொடங்குவதால் மேலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் குறுகிய சாலை என்பதால் விபத்துகள் அதிகரிக்கும். எனவே இந்த மதுக்கூடத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று டாஸ்டாக் மதுக்கடையையும் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.