கோவில் வளாகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே கோவில் வளாகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, இருதரப்பை சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அங்கு சென்று ஒருதரப்பை சேர்ந்த சிலரை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரியும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், ஊர் பொதுமக்கள் மீது பொய்வழக்கு போடுவதை கண்டித்தும் அங்குள்ள தங்கம்மன் கோவில் வளாகத்தில் நேற்று மாலையில் ெபாதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புலித்தேவர் மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் பவானி ஏ.வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் நம்பிகுமார், தலைவர் முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.