மணல் லாரிகளால் ஏற்படும் விபத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


மணல் லாரிகளால் ஏற்படும் விபத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x

மணல் லாரிகளால் ஏற்படும் விபத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

போக்குவரத்து நெரிசல்

திருச்சி திருவானைக்காவல் அருகே கொண்டையம்பேட்டை கொள்ளிடக்கரை பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கு, கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள தாளக்குடி பகுதியில் இருந்து மணல் அள்ளப்பட்டு இங்கு சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் திருவானைக்காவல் ஒய் -ரோடு அருகே உள்ள கொள்ளிடக்கரையில் ஒருவழி பாதையாக உள்ளது. இந்த வழியாக மணல் அள்ளுவதற்கும், அதிக அளவில் மணல் ஏற்றிக்கொண்டும் ஏராளமான லாரிகள் சென்று வருவதால் சாலைகள் பழுதடைகின்றன. இதனால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மறியல்

எனவே அதை தடுக்க ஒய்-ரோடு கொள்ளிடக்கரையில் மணல் லாரிகளை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதாலட்சுமி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஸ்ரீரங்கம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காண்பது என முடிவானது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story