அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்
காட்பாடியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாநகராட்சி 14-வது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் சில்க் மில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குறிப்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் செல்ல ரவுண்டானா முதல் பிரதான சாலை உள்பட அனைத்து சாலைகளும், 8-வது கிழக்கு பிரதான சாலையும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்வாய் இல்லாத தெருக்களில் கால்வாய் அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பழுதடைந்த தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதில் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றனர்.