நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் 'திடீர்' தர்ணா போராட்டம்


நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டம்
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

பாளையங்கோட்டை அம்பேத்கர் காலனி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் வசித்து வந்தனர். இந்த குடியிருப்பு சேதம் அடைந்து மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. இதையடுத்து இதனை சீரமைக்க முடிவு செய்து அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனால் அங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் தற்போது வேறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்கள். அவர்கள் தாங்கள் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் வரை தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறி நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களிடம் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "எங்களால் வாடகை அதிகமாக கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே மாநகராட்சி சார்பில் மாற்று இடத்தை மட்டும் ஒதுக்கி தந்தால் போதும். நாங்கள் குடிசை போட்டுக் கொள்வோம்" என்றனர். அதற்கு அதிகாரிகள், மாற்று இடம் வழங்குவது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மட்டுமே முடியும். எனவே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உங்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு பரிந்துரை கடிதம் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story