குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


வெண்ணந்தூர் அருகே செம்மாண்டப்பட்டி ஏரி நிரம்பியதால் உபரிநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

ஏரி நிரம்பியது

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்மாண்டப்பட்டி ஏரி பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி காணப்படுகிறது. மேலும் இந்த ஏரியில் இருந்து வரும் உபரிநீர் சேமூர் ஏரிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த ஏரிக்கு செல்லும் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் சாலைகளிலும், ராசாபாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் உபரிநீர் புகுந்து உள்ளது.

இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீரோடு கழிவுநீரும் சேர்ந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

அதேபோல் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் நெசவாளர் காலனி மற்றும் சர்க்கார்தோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு‌ கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்தது.

இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை தொடர்வதாக பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தவும், மேலும் மழைநீர் வீடுகளுக்குள் வராமல் இருக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story