குரும்பலூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


குரும்பலூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x

குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் குரும்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கேணி தண்ணீர் 8 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிப்பதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து உள்ளனர்.

பெரம்பலூர்

காவிரி குடிநீர் வினியோகம்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குரும்பலூரில் தெருக்குழாய்கள், வீட்டு குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த சில வாரங்களாகவே காவிரி தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. அதற்கு மாற்றாக மேட்டாங்காட்டு ஆற்றில் உள்ள நல்ல தண்ணீர் கேணியில் இருந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அந்த குடிநீரும் 8 நாட்களுக்கு ஒரு முறை தான் வினியோகிக்கப்படுகிறது. சில சமயத்தில் 10, 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் சுமார் 1 மணி நேரம் தான் வினியோகிக்கப்படுகிறது.

உப்பு தண்ணீர்

வீட்டில் குழாய் வைத்திருப்பவர்கள் குடிநீர் பிரச்சினையை சமாளித்து கொள்கிறார்கள். தெரு குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் போதியளவு குடிநீர் கிடைக்காமல் காசு கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் குரும்பலூர் பேரூராட்சி பூங்கா அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடம் ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை வாங்கி குடிக்கின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க முடியாத ஏழை, எளிய மக்கள் உப்பு தண்ணீரை குடிக்கும் நிலைக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது.

குழாயில் அடைப்பு

காவிரி குடிநீர் அருகே உள்ள கிராமங்களுக்கு வரும் சூழ்நிலையில் குரும்பலூருக்கு வராததற்கு காரணம் குடிநீர் வரும் குழாயில் அடைப்பு உள்ளதாக பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், காவிரி குடிநீர் வரும் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து ஊருக்கு போதிய அளவு காவிரி குடிநீர் மீண்டும் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் கேணி நல்ல தண்ணீரை தினமும் வினியோகிக்க வேண்டும். வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடிய உப்பு தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story