பெரியகுளத்தில் கலங்கலாக வரும் குடிநீரால் பொதுமக்கள் அவதி


பெரியகுளத்தில் கலங்கலாக வரும் குடிநீரால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 12 March 2023 2:15 AM IST (Updated: 12 March 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் கலங்கலாக வரும் குடிநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தேனி

பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. கொடைக்கானல் வனப்பகுதியான பேரிச்சம் ஏரியில் இருந்து வாய்க்கால் வழியாக சோத்துப்பாறை அணைக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பெரியகுளம் நகர் பகுதியில் வடகரை மற்றும் தென்கரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு, அங்கிருந்து பெரியகுளம் நகர் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் 126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம், தற்போது 29.52 அடியாக சரிந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெரியகுளத்தில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாக உள்ளது. மேலும் அந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக குற்றம்சாட்டினர். குடிநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் குடிநீர் கலங்கலாக வருகிறது. இருப்பினும் சுத்திகரித்து குடிநீர் வழங்கப்படுகிறது. இருப்பினும் குடிநீர் கலங்கலாக வருவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். தற்போது காய்ச்சல் பரவும் நிலையில் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி குடிக்க வேண்டும் என்றனர்.


Next Story