மின்சார வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் அவதி
கூடலூர் மின் நிலையத்தில் உள்ள எந்திரத்தில் திடீரென தீ பரவியது. இதனால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர் மின் நிலையத்தில் உள்ள எந்திரத்தில் திடீரென தீ பரவியது. இதனால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
எந்திரத்தில் தீ பரவியது
கூடலூர் பகுதியில் மின்சார வினியோகம் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இதை சரி செய்யும் பணியில் மின்வாரிய துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக ஓவேலி பகுதியில் மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின்வாரிய துறையினர் பழுதை சரி செய்யும் பணியில் நேற்று காலை 10 மணிக்கு ஈடுபட்டனர். இந்த சமயத்தில் கூடலூர் மின் நிலையத்தில் உள்ள எந்திரத்தில் திடீரென தீ பரவியது. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து மின்வினியோகமும் பாதிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் எந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மின் வினியோகம் பாதிப்பு
இருப்பினும் உடனடியாக சீரமைக்க முடியவில்லை. இதனால் பல கட்டமாக முயற்சி செய்து மாலை 3.45 மணிக்கு எந்திரம் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து மின்வினியோகமும் வழங்கப்பட்டது. இருப்பினும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஓட்டல்களில் உணவுகள் தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர் நடவடிக்கைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு மின்வினியோகம் சீராக வழங்கப்பட்டது. அதன் பின்னரே பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினர் நிம்மதி அடைந்தனர்.