லோடு வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்யும் பொதுமக்கள்


லோடு வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்யும் பொதுமக்கள்
x

திருத்துறைப்பூண்டியில் லோடு வாகனங்களில் தொடர்ந்து ஆபத்தான பயணம் செய்யும் பொதுமக்களை அதிகாரிகள் கவனித்து தடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் லோடு வாகனங்களில் தொடர்ந்து ஆபத்தான பயணம் செய்யும் பொதுமக்களை அதிகாரிகள் கவனித்து தடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முப்போகம் சாகுபடி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதியாகவே காணப்படுகிறது. காரணம் எந்தவித தொழில் வளர்ச்சியும் பெறாமல் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது.

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டும், மேட்டூர் அணையில் இருந்தும் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டும், சரியான நேரத்தில் பருவமழையும் பெய்து குறுவை, சம்பா, தாளடி என மூன்றுபோகம் சாகுபடி செய்தால் மட்டுமே இந்த பகுதி செழுமையாக காணப்படும்.

லோடுவாகனத்தில் பயணம்

ஆனால் சமீப காலமாக இதுபோல விவசாய பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் வேறு மாவட்டங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள 32 ஊராட்சி, 94 குக்கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதியில் நடைபெறும் திருமண விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா மற்றும் இறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல பயணிகள் செல்லும் வாகனங்களை பயன்படுத்துவதை விட, லோடு வாகனங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

குறைந்த வாடகை

குறைந்த வாடகையில் நிறைய நபர்கள் பயணம் செய்யும் வகையில் இந்த வாகனத்தில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படும் போது மேற்கண்டவாறு பயணம் செய்யும் பொதுமக்களுக்கு காயங்களும் சில சமயம் உயிரிழப்பும் ஏற்படுகின்றன.

இதுபோல லோடு வாகனங்களில் பொதுமக்கள் பயணிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனாலும் அவ்வாறு பயணம் செய்வது குறைந்தபாடில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வாறு லோடு வாகனங்களில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விபத்துகள் ஏற்படுகிறது

இதுகுறித்து சமூகஆர்வலர் பசுபதி கூறுகையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு பொதுமக்கள் லோடு வாகனத்தையே பயன்படுத்துகிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகின்றன.

தங்களுக்கு சொந்தமான வாகனங்களில் சென்றால் செலவு அதிகம் என்பதாலும், மேலும் லோடு வாகனங்களில் பயணம் செய்ய வாடகை குறைவாக இருப்பதாலும் இவ்வாறு பயணம் செய்கிறார்கள் என்றார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

வக்கீல் சதீஷ்குமார் கூறுகையில், திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. இந்த பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அளவுக்கு அதிகமான பொதுமக்கள் லோடு வாகனங்களில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்யும்போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

விபத்துகள் நடைபெறாமல் இருக்க நாம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்க்கிறோம்.

எனவே விபத்துக்கள் நடப்பதை தவிர்க்க நாம் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும். எனவே இந்த மாதிரி லோடு வாகனத்தில் அதிகளவில் பயணம் செய்வதை அதிகாரிகள் உடனடியாக தடுத்து அதற்கேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story