தூத்துக்குடி துறைமுகத்தை பார்வையிட்ட பொதுமக்கள்
வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு திங்கட்கிழமை தூத்துக்குடி துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு, வ.உ.சி. துறைமுகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
வ.உ.சி. பிறந்தநாள்
வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அவரது உருவச்சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதே போன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலும் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள்
இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் பொதுமக்கள் வ.உ.சி.துறைமுகத்துக்கு வந்து குவிந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பஸ் மற்றும் சொந்த வானங்களிலும் துறைமுகத்துக்கு வந்தனர். அவர்கள் காலை 9 மணி முதல் துறைமுகத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். மக்கள் குடும்பத்துடன் துறைமுகத்தின் ஒவ்வொரு கப்பல் தளத்துக்கும் சென்று சரக்குகளை ஏற்றி, இறக்கும் கப்பல்களை கண்டு ரசித்தனர். பலர் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இது குறித்து ஒருவர் கூறும் போது, கொரோனா காரணமாக துறைமுகத்தை பார்வையிடுவதற்கு கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் குடும்பத்துடன் துறைமுகத்துக்கு வந்து உள்ளோம். இங்கு கப்பல்களில் சரக்குகள் ஏற்றி இறக்குவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.