நெல்லையில் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணிந்து வந்த பொதுமக்கள்


நெல்லையில் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணிந்து வந்த பொதுமக்கள்
x

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து நெல்லையில் அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர்.

திருநெல்வேலி

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து நெல்லையில் அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் வெளிநோயாளிகள், ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பொது இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணியும் நடைமுறை நேற்று முதல் மீண்டும் அமலுக்கு வந்தது. நெல்லை மாவட்டத்திலும் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று காலை முதலே நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

முகக்கவசம் வழங்கிய டீன்

முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு டீன் ரவிச்சந்திரன் முகக்கவசம் வழங்கினார். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, வட்டார அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் முகக்கவசம் அணிந்தபடியே பணியாற்றுவதால், இது புதிதாக தோன்றவில்லை என்று டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. அங்கு தேவையான ஆக்சிஜன், படுக்கை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் சிகிச்சைக்கு வருகின்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Next Story