மக்கள் நல பணியாளர்கள் விருப்ப கடிதம் அளிக்க வேண்டும்


மக்கள் நல பணியாளர்கள் விருப்ப கடிதம் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Jun 2022 8:30 PM IST (Updated: 12 Jun 2022 2:06 PM IST)
t-max-icont-min-icon

வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற மக்கள் நல பணியாளர்கள் விருப்ப கடிதம் அளிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாள் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:-

வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற மக்கள் நல பணியாளர்கள் விருப்ப கடிதம் அளிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாள் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்

மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியாளர்கள் 8.11.2011 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தற்போது அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது.

இதற்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து ரூ.5,000, கிராம ஊராட்சி பணிகளுக்காக ரூ.2,500 என மொத்தம் ரூ.7,500 தொகுப்பூதியமாக மாதந்தோறும் வழங்கப்படும்.

பணியாற்ற வாய்ப்பு

இந்த பணியில் ஈடுபட விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளலாம். மேலும், ஏற்கனவே பணியாற்றியதற்கான விவரத்துடன், பணியில் ஈடுபட உள்ளதற்கான விருப்ப கடிதத்தை வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை அளிக்க வேண்டும். இந்த விருப்ப கடிதம் பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

காலம் கடந்து...

எனவே பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். விருப்ப விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபட பரிசீலிக்கப்பட உள்ளதால், குறிப்பிட்ட காலத்துக்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும். காலம் கடந்து அளிக்கப்படும் விருப்ப கடிதங்களை பரிசீலிக்க இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story