வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை(தனி) தொகுதியில் உள்ள 1,354 வாக்குச்சாவடிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆஜாஅஜீத் தலைமையில் அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் மணிமுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், ரமேஷ், ஆம்ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் பெரியார்ராமு மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட அதை அரசியல் கட்சினர் பெற்று கொண்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு பணியினை மேற்கொள்ள ஏதுவாக 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 2 கிலோ மீட்டருக்கு அதிகமான தொலைவில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், இடம் மாற்றுதல், பழுதடைந்த வாக்குச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
1,354 வாக்குச்சாவடிகள்
இதனடிப்படையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் தொகுதியில் 334 வாக்குச்சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச்சாவடிகள், மானாமதுரை(தனி) தொகுதியில் 323 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,354 வாக்குச்சாவடிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கலாம். மறுசீரமைப்பு செய்யும்முன் வாக்குச்சாவடி நிலையங்களை தணிக்கை செய்து வருகிற 29-ந்தேதிக்குள் பணியினை முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.