ராணிப்பேட்டை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ராணிப்பேட்டை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று வெளியிட்டார். அதன்படி 10,31,497 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கர பாண்டியன் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 9.11.22 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
அதன்படி பெயர் சேர்க்க 16,571, பெயர் நீக்க 7,939 பேர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் 7,078 என மொத்தம் 31,588 பேர் விண்ணப்பித்தனர். இந்த படிவங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 16,223 நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 7,528 நபர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
10,31,497 வாக்காளர்கள்
அதன்படி, அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் 1,10,675 ஆண் வாக்காளர்கள், 1,16,821 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,27,517 வாக்காளர்கள் உள்ளனர்.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் 1,36,346 ஆண் வாக்காளர்கள், 1,42,211 பெண் வாக்காளர்கள், 13 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,78,570 வாக்காளர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 1,27,136 ஆண் வாக்காளர்கள், 1,35,891 பெண் வாக்காளர்கள், 26 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,63,053 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் 1,27,663 ஆண் வாக்காளர்கள், 1,34,668 பெண் வாக்காளர்கள், 26 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,62,357 வாக்காளர்கள் உள்ளனர்.
4 தொகுதிகளிலும் சேர்த்து 5,01,820 ஆண் வாக்காளர்கள், 5,29,591 பெண் வாக்காளர்கள், 86 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 10,31,497 வாக்காளர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் பார்வைக்கு
இப்பட்டியல்கள் மாவட்டத்தில் உள்ள 1,122 வாக்குச்சாவடிகளில் அமைந்துள்ள 66 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் இப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, தேர்தல் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.