1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டி நடத்த புதுச்சேரி அரசு திட்டம்
கோடை வெயில் காரணமாக 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தப்படும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருக்கிறார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில் தற்போது வெயிலானது சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவதற்காக அரசு திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வானது இந்த மாதம் 24-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாகவும் காவலர் தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு மையங்களுக்காக அரசு பள்ளிகள் தேவைப்படும் காரணத்தினாலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை முன்கூட்டியே 11-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்து ஏப்ரல் 24-ம் தேதி முதல் மே மாதம் 31-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இதேபோல் புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் தேர்வை முன்னெச்சரிக்கையோடு எழுத வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் விடுமுறையை நீட்டிப்பது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.