புதுக்கோட்டை, ஆவூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


புதுக்கோட்டை, ஆவூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில், எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. காளைகளுக்கு பரிசுகள்

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டையில் தடிகொண்ட அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி உசிலங்குளம் அய்யனார் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை ஆர்.டி.ஓ. அபிநயா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 758 காளைகள் வந்திருந்தன. இதேபோல் மாடுபிடி வீரர்களும் 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

46 பேர் காயம்

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடின. போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ரொக்கம், மின்விசிறி, பீரோ, குக்கர் உள்ளிட்ட பொருட்களை பெற்றுச்சென்றனர். ஜல்லிக்கட்டை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். லாரிகளின் மேல் ஏறியும், தடுப்புகள் மீது ஏறி நின்றும் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

காளைகளை அடக்க முயன்றதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 46 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கேயே சிசிச்சை அளிக்கப்பட்டது.

போலீசார் தடியடி

இந்த நிலையில் காளைகளை வரிசையாக அனுப்பும் இடத்தில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த சாமியான பந்தல் சரிந்தது. இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

புனித பெரியநாயகி மாதா ஆலயம்

விராலிமலை தாலுகா, ஆவூரில் புனித பெரியநாயகி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பாஸ்கா தேர்திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 700 காளைளும், 179 வீரர்களுக்கும் கலந்து கொண்டனர். முன்னதாக பெரியநாயகி மாதா ஆலயத்தில் ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு திடலில் காலை 8.30 மணியளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதை தொடர்ந்து இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை யாரும் பிடிக்கவில்லை.

சீறிப்பாய்ந்த காளைகள்

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாகுபலி காளை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன், கருப்பு கொம்பன் உள்ளிட்ட பல்வேறு காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து சென்றன. அதைப்பார்த்த மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களை கொம்பால் முட்டியும், காலால் உதைத்தும் பந்தாடியது. தொடர்ந்து மதியம் 2 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

பரிசுகள்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் ஊரிமையாளர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த வீரர்கள் துறைக்குடி தீனா (வயது 21), வேலப்புடையான்பட்டி முத்துபிரகாஷ் (23), எழுவம்பட்டி சேவியர் (55), மண்டையூர் ரெங்கசாமி (60) ஆகிய 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி மற்றும் விராலிமலை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் மிக்சி, கிரைண்டர், சில்வர் அண்டா, குக்கர், வெள்ளி மற்றும் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஊருக்குள் புகுந்த ஜல்லிக்கட்டு காளைகள்; பொதுமக்கள் ஓட்டம்

புதுக்கோட்டை நகரப்பகுதியையொட்டி குடியிருப்பு பகுதி பக்கம் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டு திடலை தாண்டி ஊருக்குள் புகுந்து ஓடியது. பெரிய கொம்புகளுடன் பாய்ந்தோடிய காளைகளை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். காளைகளின் உரிமையாளர்கள் அதனை விரட்டிச்சென்று பிடித்தனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தை தாண்டியும், நடுரோட்டில் காளை பாய்ந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் தெறித்தோடினர். இதேபோல் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்குள் சில காளைகள் புகுந்தன. இதில் பள்ளியை விட்டு வெளியே பாய்ந்தோடிய போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை முட்டி தள்ளியது. இதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். மேலும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் சேதம் அடைந்தது.


Next Story