புதுக்கோட்டையில் உழவர் சந்தை விவசாயிகள் திடீர் போராட்டம்


புதுக்கோட்டையில் உழவர் சந்தை விவசாயிகள் திடீர் போராட்டம்
x

புதுக்கோட்டையில் சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உழவர் சந்தை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.

புதுக்கோட்டை

உழவர் சந்தை

புதுக்கோட்டையில் சந்தைபேட்டை அருகே உழவர்சந்தை அமைந்துள்ளது. கடந்த 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகள், வியாபாரிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் சாலையோரத்தில் காய்கறி கடைகள் போடப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

இதனால் பொதுமக்கள் பலர் சாலையோர கடைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி செல்வதால், உழவர் சந்தையின் உள்ளே கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் உழவர் சந்தையின் நுழைவுவாயில் அருகே இரும்பு கம்பிகள் ஊன்றி கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது.

போராட்டம்

இந்த நிலையில் உழவர் சந்தையில் இன்று கடைகள் அமைக்க வந்த விவசாயிகள் திடீரென நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் உழவர்சந்தை வளாகத்தில் சிலர் திரண்டு நின்றனர். நுழைவு வாயில் அருகே கடைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குவதால் தங்களுக்கு வியாபாரம் பாதிப்பதாகவும், விற்பனைக்காக கொண்டுவரப்படும் காய்கறிகள் விற்பனையாகாமல் வீணாகி போவதாகவும், உழவர் சந்தையின் அருகே சாலையோரம் காய்கறிகள் உள்ளிட்ட கடைகள் வைக்க அனுமதிக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் தவித்தனர். தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், உழவர் சந்தை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

1 மணி நேரம் பாதிப்பு

மேலும் உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் சாலையோரம் கடைகள் வைக்க அனுமதிக்கப்படாது என உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின் உழவர் சந்தையில் காய்கறிகள் வியாபாரம் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் வியாபாரம் பாதிப்படைந்தது.


Next Story